நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக உண்ணும் உணவுகளை கவனமாக தேர்ந்தெடுத்து உண்போம். அப்படி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுப் பொருள் தான் பருப்பு வகைகள்.
மனித உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரித்தால், மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். பருப்பு வகைகளில் பல உள்ளன. அதில் சில பருப்புகள் கொலஸ்ட்ராலை கணிசமாக குறைக்கும். அப்படிப்பட்ட ஓர் பருப்பு தான் பாசிப்பருப்பு.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் பாசிப்பருப்பு
பாசிப்பருப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. பாசிப்பருப்பை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பின் அபாயம் குறையும். ஏனெனில் எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது மாரடைப்பின் அபாயமும் அதிகரிக்கும். அதுவும் வாரத்திற்கு மூன்று முறை பாசிப்பருப்பை சாப்பிட்டால், இதயம் பாதுகாப்பாக இருக்கும்.
பாசிப்பருப்பின் பிற நன்மைகள் என்ன?
எடை இழப்பு
பாசிப்பருப்பு உடலில் கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் இருப்பை அதிகரிக்கிறது. ஆகவே இந்த பருப்பை உண்டதும் வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதோடு, இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் மெட்டபாலிச அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கும்
பாசிப்பருப்பு உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, டயட்டரி நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல அடங்கும். இந்த சத்துக்களுடன் பாசிப்பருப்பு உடல் திசுக்கள், தசை மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சிக்கும், அதை சரிசெய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சர்க்கரை நோயைத் தடுக்கிறது
பாசிப்பருப்பில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால், இது உடலில் இன்சுலின் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆகவே இந்த பருப்பை அடிக்கடி உணவில் சேர்ப்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
செரிமானத்திற்கு நல்லது
செரிமான அமைப்பில் பியூட்ரேட் என்னும் சிறப்பான கொழுப்பு அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுவதால், பாசிப்பருப்பு செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக பாசிப்பருப்பு லேசான எடையைக் கொண்டதால், இது ஜீரணிக்க மிகவும் எளிதாக இருக்கும்.
இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது
பாசிப்பருப்பில் இரும்புச்சத்து இருப்பதால், இது உடலில் போதுமான அளவு இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் இரத்த சோகையின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு இது உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் உயிரணுக்களை இரத்தம் அடைந்து ஆக்ஸிஜனை வழங்குகிறது. மொத்தத்தில், இது உடல் செயல்பாடுகளின் சரியான செயல்திறனை உறுதி செய்கிறது.